Friday, April 14, 2017

மட்டக்களப்பில் வேடுவ சமூகம் வாழ்ந்த குகைகள் கண்டுபிடிப்புமட்டக்களப்பில் வேடுவ சமூகம்  வாழ்ந்த குகைகள் கண்டுபிடிப்பு

பேராசிரியர் ப. புஷ்பரட்ணம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்


நீண்டகாலமாக இலங்கை வரலாறு பற்றிய தொல்லியல், வரலாற்று ஆய்வுகளில் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத பிராந்தியங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் கருதப்பட்டு வருகிறது. ஆயினும் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பேராசிரியர் பரணவிதான இப்பிராந்தியத்தில் மேற்கொண்ட புராதன கல்வெட்டுக்கள் தொடர்பான ஆய்வுகளும், இலங்கைத் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட சில தொல்லியல் ஆய்வுகளும் இலங்கையின் ஏனைய பல பிராந்தியங்களைப் போல் மட்டக்களப்பிற்கும் தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதை அடையாளப்படுத்த உதவியுள்ளன. அவற்றை மேலும் முன்னெடுத்துச் சென்றதில் தொல்லியலாளர் செல்வி.தங்கேஸ்வரியின் ஆய்வுகளுக்கு முக்கிய இடமுண்டு. ஆயினும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் வரலாறு ஒரு சிறப்பு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மட்டக்களப்பு வரலாறு பற்றிய ஆய்வுகள் புது உத்வேகம் பெற்றதைக் காணமுடிகிறது. அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களும், கல்வி கற்கும் இறுதிவருட மாணவர்களும் தமது ஆய்வுகளுக்கு மட்டக்களப்பையே பெரும்பாலும் ஆய்வுப்பரப்பாக எடுத்துக் கொண்டிருப்பதால் அவர்கள் மேற்கொண்டுவரும் ஆய்வுத் தரவுக்கான தேடல்களில் கிடைத்துவரும் வரலாற்றுப் பெறுமதியுடைய சான்றாதாரங்கள் மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்றிற்குப் புதுவெளிச்சமூட்டுபவையாக உள்ளன. அத்தகைய தொல்லியல் மையங்கள் சிலவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடாத்திய பேராசிரியர் சி.பத்மநாதன் அங்கு காணப்படும் தொல்லியல் சான்றாதாரங்கள் தொடர்பாக பத்திரிகைகளுக்கு கொடுத்துவரும் ஆதாரபூர்வமான செய்திகள் மிகுந்த நம்பிக்கையையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் மட்டக்களப்பு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இறுதி வருட மாணவி செல்வி ம.பிரசாந்தி தனது இறுதி வருட ஆய்வுக்கான தரவுகளைத்தேடும் நோக்கில் கரடியனாறு, வவுணதீவு ஆகிய இடங்களில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது. இதில் மட்டக்களப்பு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை கனிஷ்ட விரிவுரையாளர் செல்வி பி.நிலாந்தினி, தொல்லியல் ஆர்வலர்.ம.பிரசாந் மற்றும் வரலாற்று மாணவர் சிலரும் கலந்து கொண்டனர்.
 
குசாணமலை

இவ்விடம் செங்கலடியில் இருந்து தெற்கே 10 கி.மீ தொலைவில் பதுளை வீதிக்கு மேற்காக அமைந்துள்ளது. காடுகளும், சிறு பற்றைகளும் சூழ்ந்த இக்குசாணமலைப் பகுதியில் தற்போது குடியிருப்புக்கள் காணப்படாவிட்டாலும் முன்பொரு காலத்தில் செறிவான குடியிருப்புக்களும், மக்கள் நடமாட்டமும் இருந்ததற்கான ஆதாரங்கள் செறிவாகக் காணப்படுகின்றன. இங்கு பரவலாகக் காணப்படும் கருங்கல் தூண்களும், செங்கட்டியால் அமைக்கப்பட்ட இருப்பிடங்களின் அழிபாடுகளும், பரவலாகக் காணப்படும் மட்பாண்டங்களும், இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள ஏழு பிரமிக் கல்வெட்டுக்களும் இங்கு புராதன குடியிருப்புக்களுடன் சமயம் சார்ந்த கட்டடங்களும் இருந்துள்ளன என்பதை உறுதி செய்கின்றன.

தென்னாசியாவின் தமிழகம் தவிர்ந்த பல வட்டாரங்களில் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.4ஆம் நூற்றாண்டு வரை பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. ஆனால் குசாணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கல்வெட்டுக்களில் தமிழகத்தைப் போல் தமிழ் மொழிக்கே சிறப்பான எழுத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழுக்குரிய தனித்துவமான இவ்வெழுத்துக்களிலிருந்து இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பிராந்தியத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு இருந்ததெனக் கூறலாம். அண்மைக் காலங்களில் மட்டக்களப்பிலுள்ள பிரமிக் கல்வெட்டுக்களை ஆய்வு செய்து வரும் பேராசிரியர் சி.பத்மநாதன் தனது களவாய்வின் போது தமிழ் மொழிக்கே சிறப்பானமற்றும்போன்ற எழுத்துக்களை அடையாளம் கண்டதாகப் பத்திரிகைகளில் கூறியிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது.

மட்டக்களப்பு மக்களிடையே குசாணமலையின் உச்சியில் பண்டுதொட்டு முருகன் ஆலயம் இருந்ததென்ற ஆழமான வரலாற்று நம்பிக்கை காணப்படுகிறது. அம்முருகனின் அற்புதங்கள் தொடர்பான ஐதீகக் கதைகள் மக்களிடையே காணப்படுவதுடன், மலை உச்சியில் காணப்படும் கட்டட எச்சங்களையும் புராதன முருகன் ஆலயத்திற்கு உரியதாகவே கருதுகின்றனர். அவற்றைக் கருத்தில் கொண்டு தற்போது மட்டக்களப்பு முருக பக்தர்களால் மலையின் உச்சியில் அமைக்கப்பட்டு வரும் முருகன் ஆலயம் குசாணமலைக்கே புனிதத் தன்மையை அளித்து வருவதாக உள்ளது. எதிர்காலத்தில் இவ்வாலயம் குசாணமலைப் பிரதேசத்தின் வரலாற்றுத் தொன்மையை அடையாளப்படுத்தும் குறியீடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கிரந்தன்வெட்டியமலை

எமது தொல்லியல் ஆய்வின் போது அடையாளம் காணப்பட்ட அதிக முக்கிய தொல்லியல் மையமாக கிரந்தன்வெட்டியமலைக் குகைக் குடியிருப்பு பகுதி காணப்படுகிறது. இவ்விடம் கரடியனாற்றில் இருந்து தென்கிழக்கே ஏறத்தாள 40 கி.மீ. தொலைவில் உள்ள வவுணதீவுப் பிரதேசத்தில் காணப்படுகிறது. தற்போது இவ்விடம் மக்கள் நடமாட்ட மற்ற அடர்ந்த காடுகளாகவும், சிறு மலைகளாகவும் காணப்பட்டாலும் இற்றைக்கு 1700 வருடங்களுக்கு முன்னர் செறிவான குடியிருப்புக்களைக் கொண்ட பிரதேசமாக இருந்திருக்கலாம் என்பதை அம்மலைப் பிரதேசத்தில் காணப்படும் கட்டட அழிபாடுகளும், பரவலாகக் காணப்படும் மட்பாண்ட ஓடுகளும், புராதன கல்வெட்டுக்களும் உறுதி செய்கின்றன. அவற்றுள் மலையில் உள்ள குகைக் குடியிருப்புகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.
ஏறத்தாள 20 அடி உயரமான இம்மலையில் மூன்று வெவ்வேறு கால கட்டத்தைச் சேர்ந்த குடியிருப்புக்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. இதன் தொடக்க காலக் குடியிருப்பாக குகைக்குடியிருப்பு இருந்திருக்கலாம். ஏனெனில் இக்குகையின் மேற்பகுதியில் பிற்பட்ட காலத்தில் செங்கட்டிகளால் அமைக்கப்பட்ட குடியிருப்புக்களும், இவற்றிற்கு தெற்கே சற்றுப் பள்ளமான தரைப் பகுதியில் கருங்கற்களாலும், செங்கட்டிகளாலும் அமைக்கப்பட்ட புராதன ஆலயங்கள் மற்றும், குடியிருப்புக்களின் எச்சங்கள் பரந்த அளவில் காணப்படுகின்றன. இக்கட்டட எச்சங்கள் இற்றைக்கு 1700 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்பதை அக்கட்டட அழிபாடுகளிடையே காணப்படும் பிரமிக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன.

வேடர்கள் வாழ்ந்த குகையா? கற்கால மனிதன் வாழ்ந்த குகையா?
இதுவரை வடகிழக்கு இலங்கையில் கண்டறிப்பட்ட ஆதிகால மனிதன் வாழ்ந்த முதலாவது குகை என்ற வகையில் வவுணதீவில் உள்ள கிரந்தன் வெட்டியமலையில் உள்ள குகைக்குத் தனிச் சிறப்புண்டு. இச்சிறு மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகையை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் செயற்கையாக மாற்றி வடிவமைத்ததிலிருந்து இக்குகையில் ஆதிகால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது நன்கு புலனாகிறது. இக்குகை ஏறத்தாள 10 அடி நீளமும் 4அடி உயமும் கொண்டது. குகையின் உட்பகுதி மண்ணால் மூடுண்டு இருப்பதினால் அதன் உட்பரப்பை தற்போது அறிய முடியாதிருக்கிறது. இக்குகையின் முகடு இயற்கையான பாறையால் மூடப்பட்டிருந்தாலும் அதன் மேற்பாகங்கள் மூன்று அடுக்குகளாக செயற்கையாகச் செதுக்கப்பட்டுள்ளன. குகையின் வாசற்பகுதியின் மூன்று பக்கங்களும் நன்கு செதுக்கப்பட்டு மக்கள் உள்ளே இலகுவாக சென்றுவருவதற்கு ஏற்ற வகையில் செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இச்சிறு மலையில் இக்குகைக்குள் மட்டும் தாழ்வான இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டு போடப்பட்ட செம்மண் குகையின் கீழ்த்தரையில் காணப்படுகிறது. தற்போது குகையின் வாசல்பகுதியைத் தவிர குகையின் உட்பக்கம் பெருமளவுக்கு மண்ணாலும், சிறிய தாவரங்களாலும் மூடப்பட்டிருப்பதனால் குகையின் உட்புற உயரத்தை, நீள அகலத்தை அறிய முடியாதிருக்கிறது. ஆயினும் வாசல்பகுதி மண்குவியலில் இருந்து கிடைத்த மட்பாண்ட ஓடுகளைக் கொண்டும், கலாசார வேறுபாட்டை உணர்த்தும் மண்ணின் தன்மையைக் கொண்டும் இக்குகையில் ஆதிகால மக்கள் வாழ்ந்துள்ளனர் எனக் கூறமுடியும். மேலும் குகையின் தரைப்பகுதி மண்படையில் இருந்து ஏற்படுத்தப்பட்ட ஓசையில் இருந்து இம்மண்படைக்குள் கலாசார எச்சங்கள் பல இருக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

கலாநிதி பொ.இரகுபதி மற்றும் புதுச்சேரிப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் க.இராசன் ஆகியோர் ஆதிகாலத்தில் வேடர்கள் வாழ்ந்த இடமாக இக்குகை இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இலங்கையில் கற்கால மக்கள் குகைகளில் வாழ்ந்தமைக்கு ஆதாரங்கள் உண்டு.
முன்பொரு காலத்தில் கற்கால மக்கள் மட்பாண்டங்களின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை எனக் கருதப்பட்டது.

ஆனால் அண்மையில் தென்னிலங்கையில் பலாங்கொடை கித்துள்கொட பாகியன்குகை ஆகிய இடங்களில் நடாத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் நுண்கற்காலப் பண்பாட்டின் இறுதிக்காலகட்டத்தில் அம்மக்கள் (Mesolithic People) மட்பாண்டத்தின் பயன்பாட்டை அறிந்திருந்தமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்நுண்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்களே தென்னிலங்கையில் தற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேடுவ சமூகம் என்பது அறிஞர்களின் பொதுவான கருத்தாகும். மட்டக்களப்பில் வேடுவ சமூகம் பண்டு தொட்டு வாழ்ந்து வருவதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. சமகாலப் போர் நடவடிக்கையயின் போது இதுவரை காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த இச்சமூகம் தொடந்தும் அங்கு வாழமுடியாது நகரத்தை நோக்கிப் புலம்பெயர்ந்த போது அவர்களின் மொழியும் வாழ்வியல் முறையும் நகர மக்களுக்கு புதியவையாக இருந்தன. இந்த மக்களின் வாழ்வியலை மட்டக்களப்பின் பழங்குடி மக்கள் என்ற தலைப்பில் விரிவாக ஆய்வு செய்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியர் கா.குகபாலனால் அம்மக்கள் பேசிய மொழியின் பல சொற்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதன்காரணமாக இவர்கள் பேசிவரும் மொழிச் சொற்களை ஆய்வு செய்து புதுச்சேரிப் பல்கலைக்கழக மொழியியல் அறிஞர் பேராசிரியர் விஜயவேணுகோபால் இம்மக்கள் பேசிவரும் தமிழ் மொழியோடு புராதன தெலுங்கு கன்னட மொழிச் சொற்களும் கலந்திருப்பதாகக் கூறி அச்சொற்கள் பழங்குடி மக்கள் பேசிவந்த மொழியின் எச்சங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்று மட்டக்களப்பில் வேடுவ சமூகத்திற்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதைக் காட்டுகிறது. அதன் தொடக்க கால ஆதாரமாக கிரந்தன் வெட்டியமலையில் உள்ள குகைக் குடியிருப்பை நோக்கலாம். இப்பிரதேசத்தில் மேலும் சில குகைககளுடன் பெருங்கற்காலக் கல்வட்ட ஈமச்சின்னங்களும் எம்மால் அடையாளம் காணப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இலங்கைத் தொல்லியல் திணைக்கள அனுமதியுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வுகள் மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்றிற்கு புதுவெளிச்ச மூட்டும் நம்பகத்தன்மையுடைய ஆதாரங்கள் கிடைக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு என நம்பலாம்.

நன்றி: வீரகேசரி, 15 செப்டம்பர் 2013 

No comments:

Post a comment